Sunday, May 30, 2010

கம்பன் ஒரு வித்தன் - பாகம் 1

தமிழ் நல் உலகிற்கு கம்பன் ஒரு வரம், அவன் அளித்த கொடைகம்பராமாயணம். கம்பராமயணத்தை ஒரு இறை காவியமாக மட்டும் படைக்காமல், தமிழ் சுவை கொண்ட ஒரு இலக்கிய காவியமாகவும் படைத்திருக்கிறான் கம்பன் ! "கம்பன் வீடு கட்டு தறியும் கவி பாடும்" என்பது சற்றே மிகை படுத்தி சொல்வது போல் ஆனாலும், கம்பன் அதற்கு உரியவனே !

கம்பராமயணத்தை விமர்சனம் செய்ய கிளம்பியவர்கள் அதிகம். அவர்கள் அனைவரும் இறுதி இல் கம்பனின் சொல்வன்மைக்கு அடிமையே, கண்ணதாசன் உட்பட. கம்பராமாயணத்தின் புகழை பரப்பிய பெருமை திராவிட இயக்கத்தை சாரும். கம்பராமாயண எதிர்ப்பு என்ற பெயரில், அவர்கள் செய்த அனைத்தும் கம்பராமாயணத்தின் புகழை மென்மேலும் மெருகேற்றியது. அவர்களே அறியாமல் , அவர்கள் தமிழுக்கு செய்த ஒரே நல்ல விஷயம் அது தான் ! போகட்டும், அரசியல் இங்கே வேண்டாம்.

முழுவதுமாக கம்பராமயணத்தை படிக்க தொடங்கி இருகிறேன் நான். பல இடங்களில் கம்பன் என்னை வியக்க வைக்கிறான். அவற்றில் சில வற்றை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனவே கம்பன் ஒரு வித்தன் ஒரு தொடர் பதிவு.

பாடல்:
வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
ஒண்மை இல்லை, பல் கேள்வி ஓங்கலால்.


பொருள்:
கோசல நாட்டின் பெருமை பற்றி சொல்லும் பொழுது, "அங்கே வள்ளல் தன்மை என்பதே இல்லை ஏனென்றால் வறுமையே இல்லை . வீரமே இல்லை, ஏனென்றால் எதிரிகள் என்று யாருமே இல்லை. உண்மையே இல்லை , ஏனென்றால் பொய் பேசுபவர்கள் யாருமே இல்லை. ஆகவே, உண்மை என்பது தனிச்சிறப்பு உள்ள ஒன்றாகக் கருதப்படவில்லை. அறிவுடைமையே இல்லை, ஏனென்றால் எல்லோரும் பல பெரியவர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்ட கேள்விச் சிறப்பு கொண்டவர்களாக இருந்ததால், ‘இன்னார் அறிவில் சிறந்தவர்’ என்று தனித்துச் சொல்ல முடியவில்லை " என்று கூறுகிறான்.

ஒவ்வொரு அடி இன் முதல் பகுதியை பாருங்கள். வள்ளல் தன்மை இல்லை, வீரம் இல்லை, உண்மை இல்லை, அறிவு இல்லை என்று ஏதோ வசை படுவது போல் சொல்லி விட்டு, மறு பாதி பாட்டில் வைத்திருக்கிறான் முடிச்சை ! இதை கம்பன் குசும்பு என்று சொல்லவே தொன்றுகிறது. ஆனால் தமிழ் சுவை கொண்ட குசும்பு. ரசிக்க வேண்டிய குசும்பு !

கம்பன் புகழ் வாழ்க ! மீண்டும் சந்திபோம் .

அன்புடன்,
பெருமாள்.

Sunday, May 9, 2010

நீயன்றி நானில்லை !

"எவள் இல்லையென்றால் நான் இந்த பூமிக்கு வந்திருக்க முடியாதோ,எவளை இழந்து விட்டால் என்னால் திரும்ப பெற முடியாதோ , அவளே என் தாயாவாள் " - கண்ணதாசன்.

இவ்வுலகில் எல்லா ஜீவராசிகளிடத்தும் காண முடிந்த பொதுவான ஒன்று தாய்மை. அது ஆடோ, மாடோ, குருவியோ , காக்காவோ, குரங்கோ, மனிதனோ யாராக இருந்தாலும் தாய்மையை காணாமல் இருந்திருக்க முடியாது. தாய்மையின் பெருமை பற்றி சொல்வது அவசியமற்றது. அத்தகைய உன்னதமான தாய்மை குணத்தை கொண்டுள்ள தாய்மார்களை போற்றும் இந்நாளில் என் அன்பான வாழ்த்துக்களை என் தாய்க்கும் அனைத்து தாய்மார்களுக்கும் காணிக்கை ஆக்குகிறேன். தாயே , உன் அன்புக்கு ஈடு இணை எதுவுமே இல்லை. உன் கையால் கிடைக்கும் வெறும் சோற்றின் சுவை வேறு எந்த உணவுக்கும் இல்லை. உன் அன்புக்கு நான் அடிமை. நீயன்றி நானில்லை !

இந்த புனிதமான நாளில், வருத்தத்திற்கு உரிய ஒரு செய்தியையும் சொல்ல வேண்டும். தாய்மை மகத்துவம் புரியாத இக்கால "நாகரீக" அம்மணிகள் சிலர் குழந்தை பராமரிப்பை சுமையாக கருதி வருவது வருத்தத்திற்கு உரிய செய்தி. உங்களுக்கு என் வேண்டுகோள் "தயவு செய்து குழந்தை பெற்று கொள்ளாதீர்கள்." உங்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது .

அன்புடன்,
பெருமாள்.